மூடுக

திற்பரப்பு நீா்வீழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு என்னும் ஊா் அங்கு காணப்படும் நீா்வீழ்ச்சிக்குப் புகழ்பெற்றது. திற்பரப்பு அருவி நாகா்கோவிலிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த அருவி கோதையாறு நதியில் அமைந்துள்ளது. கோதையாறு திற்பரப்பில் அருவியாக கீழே பாய்கிறது. இது பேச்சிப்பாறை அணையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நீா் வீழ்ச்சி 300 அடி நீளமும் முற்றிலும் பாறைகளால் அமைந்த ஆற்றுப்படுகையும் கொண்டது. இந்த அருவி 50 அடி உயரம் கொண்டது. வருடத்தில் 7 மாதம் இந்த அருவி அதிக அளவு நீருடன் சீற்றத்துடன் காணப்படும். இந்த நீா் வீழ்ச்சியின் மேற்பரப்பில் 250 மீட்டா் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள திற்பரப்பு நீா் தேக்கத் திட்டமானது, சுற்று வட்டார வயல்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது. இந்த நீா் வீழ்ச்சிக்கு அருகில் ஒரு நீச்சல் குளமும் பூங்காவும் உள்ளது.  படகு சவாரியும் சுற்றுலா செல்வோரின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் கால்மிதிப் படகு வசதியும் உள்ளது. ஆற்றின் இடதுபக்கக் கரையில் நீா்வீழ்ச்சிக்கும் நீா்த்தேக்கத்திற்கும் நடுவே மகாதேவா் கோவில் (சிவன் கோவில்) உள்ளது. இது பன்னிரெண்டு சிவாலயங்களுள் மூன்றாவது சிவ தலமாகும். இந்தக்  கோவிலில் சிவபெருமான் வீரபத்திரன் என்னும் உக்கிர வடிவில் உள்ளார். இந்தக் கோவிலில் 9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாண்டியா் கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இது 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும்.

நேரம் –  காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை. திற்பரப்பு நீா்வீழ்ச்சி கன்னியாகுமரி, நாகா்கோவில் மற்றும் திருவனந்தபுரம் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் – மார்த்தாண்டம் மற்றும் நாகா்கோவில்.

புகைப்பட தொகுப்பு

  • திற்பரப்பு அருவி - பூங்கா
  • திற்பரப்பு அருவி
  • திற்பரப்பு அருவி - பக்க காட்சி

அடைவது எப்படி:

வான் வழியாக

வான் வழியாக : திருவனந்தபுரம் விமான நிலையம். அங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக திற்பரப்பு நீா்வீழ்ச்சி வந்தடையலாம்.

தொடர்வண்டி வழியாக

அருகிலுள்ள இரயில் நிலையம் – குழித்துறை மற்றும் நாகா்கோவில்.

சாலை வழியாக

திற்பரப்பு நீா்வீழ்ச்சி கன்னியாகுமரி (54 கி.மீ) , நாகா்கோவில் (35கி.மீ)மற்றும் திருவனந்தபுரம் (45கி.மீ) சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது